வீடுகளில் சீன மின் மீட்டர் பொருத்தியதில் முறைகேடு மின்துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற குழு சரமாரி கேள்வி


வீடுகளில் சீன மின் மீட்டர் பொருத்தியதில் முறைகேடு மின்துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற குழு சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 11 Dec 2019 4:30 AM IST (Updated: 11 Dec 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் சீன மின் மீட்டர் பொருத்தியதில் முறைகேடு நடந்து இருப்பதாக மின்துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற குழு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

புதுச்சேரி,

புதுவை மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியது, பழைய மின்சாதன பொருட்களை அகற்றுவது மற்றும் ஏலம் விடுவது தொடர்பாக சட்டமன்ற மதிப்பீட்டு குழு நேற்று ஆய்வு செய்தது. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, தனவேலு, விஜயவேணி, வெங்கடேசன், சங்கர் ஆகியோர் மின்துறைக்கு சென்று அதிகாரிகளை அழைத்து பேசினார்கள்.

கூட்டத்தில் மின்துறை செயலாளர் தேவேஷ்சிங், துறைத்தலைவர் முரளி மற்றும் அதிகாரிகள், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் கேள்வி

அப்போது மின்துறையின் செயல்பாடு குறித்து எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அரசுத் துறைகள் சிறப்பாக செயல்படவும், வீண் விரயங்களை தடுக்கவும், இழப்பீடுகளை தடுத்து நிறுத்தும் எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பொது கணக்குக்குழு மற்றும் மதிப்பீட்டு குழுக்களை நியமனம் செய்துள்ளது. புதுவையில் 4 லட்சத்துக்கும் மேல் மின் இணைப்புகள் உள்ளபோது 34 ஆயிரம் சீன மின் மீட்டரை பொருத்த யார் அனுமதி கொடுத்தது? சாதாரண டிஜிட்டல் மீட்டர் சுமார் ரூ.1,400-க்கு கிடைக்கும்போது சீன மீட்டரை ரூ.13 ஆயிரத்து 500-க்கு வாங்கவேண்டிய அவசியம் என்ன? அதை வணிக நிறுவனங்களுக்கு பொருத்தாமல் ஏழை மக்களின் வீடுகளில் பொருத்த வேண்டிய அவசியம் என்ன?. இதில் முறைகேடு உள்ளது.

காலி பணியிடங்கள்

ஏழைகளின் வீடுகளில் பொருத்தியதை வணிக நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யவேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை ஏன் இதுவரை செயல்படுத்தவில்லை? நகரப்பகுதி முழுவதும் தரமான கேபிள்கள் புதைக்கவேண்டும். மின் கட்டணம் அபராத வட்டி மாதத்திற்கு 2.5 சதவீதம் என ஆண்டிற்கு 30 சதவீதம் மொத்தமாக வசூல் செய்வது சட்டவிரோதமானது. ஹைமாஸ் விளக்குகள் 90 சதவீதம் எரிவதில்லை. அதன் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தது ஏன்?

தெருவிளக்குகளில் 30 சதவீதத்துக்கும் மேல் எரிவதில்லை. மின்இழப்பு, மின் திருட்டை தடுக்கவில்லை. இதனால் ஏற்படும் இழப்பு தொகையை நுகர்வோர் தலையில் சுமத்துவது ஏன்? காலியாக உள்ள 500 பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். முத்தியால்பேட்டையில் 8 மின்மாற்றிகள் அமைக்க கோரிக்கை விடுத்தும் செய்யவில்லை.

கட்டணம் வசூலிப்பது ஏன்?

வீடுகளுக்கு மின்சப்ளை செய்யும் கேபிள் எரிந்தால் ரூ.8 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர். பழுது ஏற்பட்டால் ரூ.2 ஆயிரம் வசூலிக்கின்றனர். சேவை கட்டணம் வசூலிக்கும் நிலையில் மீண்டும் ஏன் பழுது பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கவேண்டும்?

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

சிவா எம்.எல்.ஏ.

சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த கூட்டத்திலேயே ஸ்மார்ட் மீட்டர் வாங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தோம். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தவறானவர்கள் கைகாட்டப்பட்டு இருப்பார்கள். புதுவையை ஆளும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் சட்டமன்ற குழுக்களின் அதிகாரம் பற்றி தெரியவில்லை. தவறு செய்தவர்களுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆதரவு இருந்திருக்காது. மக்கள் எங்களிடம்தான் கேள்வி கேட்கின்றனர்.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மீட்டர் விளக்கு எரியாவிட்டாலும், செல்போனுக்கு சார்ஜ் போட்டாலும் ஓடுகிறது. நான் பிப்டிக் தலைவராக உள்ளதால் புதுவையில் தொழில் தொடங்குவது குறித்து தமிழக தொழில் அதிபர்கள் என்னை சந்தித்து பேசுகின்றனர். அப்போது மின்கட்டணம் குறித்து தெரிவித்தால் தமிழகத்தில் அதைவிட குறைவு என்று கூறுகின்றனர். சுனாமி பாதித்த பகுதிகளில் திட்ட அமலாக்க முகமை மூலம் மின்துறை பணிகள் நடைபெறுகிறது.

பழுது ஏற்பட்டால்...

அந்த பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கு மின்துறை பொறுப்பேற்குமா?

பொதுப்பணித்துறையில் உள்ளதுபோல் தலைமை பொறியாளர் பதவியை ஏன் உருவாக்கவில்லை?

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story