வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக ரஜினி போட்டியிடுவார் சத்தியநாராயணராவ் தகவல்


வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக ரஜினி போட்டியிடுவார் சத்தியநாராயணராவ் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2019 4:30 AM IST (Updated: 12 Dec 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் கூறினார்.

காவேரிப்பட்டணம்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் அருகே சாக்கடை கால்வாயை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மூன்று இடங்களில் ரூ. 3 லட்சம் மதிப்பில் சிறு பாலங்கள் கட்டப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்து நேற்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி சிறு பாலங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.வி.எஸ். சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாபா மாதையன் வரவேற்றார். இணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட நிர்வாகிகள் சலீம்பா‌ஷா, வக்கீல் கோவிந்தராஜ், கிரு‌‌ஷ்ணகிரி முத்து, ஊத்தங்கரை சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் பங்கேற்று பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முதல்-அமைச்சர் வேட்பாளர்

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சாக்கடை கால்வாயில் இறங்கி ஆற்றுக்கு சென்று கொண்டிருந்த மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர் சிறு பாலங்கள் கட்டி கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வருகிற 2020-ம் ஆண்டில் ரஜினி கட்சியை தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார்.

வருகிற 2021-ம் ஆண்டு ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும். 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி முதல்-அமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார். நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து ரஜினி கருத்து கூறுவார். தமிழகத்தில் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நிச்சயம், நாச்சிக்குப்பம் கிராமத்திற்கும் வருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் மன்ற நிர்வாகிகள் காமராஜ், தெய்வம், சின்னசாமி, மணி, முனுசாமி, செல்வம், குட்டி, ஜனார்த்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story