பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் இயங்கும் வருகிற 1-ந் தேதி முதல் அமல்

பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக்காக அடுத்தமாதம்(ஜனவரி) 1-ந் தேதி முதல் மெஜஸ்டிக்கில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் இயங்க உள்ளன.
பெங்களூரு,
பெங்களூருவில் பையப்பனஹள்ளியில் இருந்து மைசூரு ரோடு வரையும், நாகசந்திராவில் இருந்து எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். காலை 5 மணிக்கு சேவையை தொடங்கும் மெட்ரோ ரெயில்கள் இரவு 11.25 மணிக்கு மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பையப்பனஹள்ளி, மைசூரு ரோடு, நாகசந்திரா, எலச்சனஹள்ளி நோக்கி புறப்பட்டு சேவையை முடித்து கொள்கின்றன.
முன்னதாக பையப்பனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கும், மைசூரு ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.05 மணிக்கும், நாகசந்திரா மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 10.50 மணிக்கும், எலச்சனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கும் கடைசியாக மெட்ரோ ரெயில்கள் புறப்படுகின்றன. இந்த ரெயில்கள் பெங்களூரு மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து திரும்பி இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு செல்கின்றன.
நள்ளிரவு 12 மணி வரை இயங்கும்
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவை 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி மெஜஸ்டிக்கில் இருந்து இரவு 11.25 மணிக்கு இறுதியாக புறப்பட்ட மெட்ரோ ரெயில் வருகிற 1-ந் தேதி (ஜனவரி மாதம்) முதல் நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு செல்ல உள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சேட் கூறுகையில், ‘பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு மாதம் இறுதியில் மெட்ரோ ரெயில் மார்க்கத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும்‘ என்றார்.
Related Tags :
Next Story