கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பாவுடன் சந்திப்பு மந்திரிசபையில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பாவுடன் சந்திப்பு மந்திரிசபையில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:15 PM GMT (Updated: 11 Dec 2019 8:27 PM GMT)

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை திடீரென்று சந்தித்து பேசினார்கள். மந்திரிசபை விரிவாக்கம், துறைகள் ஒதுக்குவது குறித்து எடியூரப்பாவுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதி களுக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதி களில் வெற்றி பெற்றது.

ஓட்டலில் ஆலோசனை

அவர்களில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரிபதவி வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது. இதற்காக கர்நாடக மந்திரிசபை கூடிய விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள ஓட்டலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, பி.சி.பட்டீல், சோமசேகர், பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்கள்.

அவர்களுடன் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களான முனிரத்னா, பிரதாப் கவுடா பட்டீல் ஆகிய 2 பேரும் உடன் இருந்தார்கள். இந்த சந்திப்பின் போது மந்திரிசபை விரிவாக்கம், தங்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடியூரப்பாவுடன் சந்திப்பு

இந்த நிலையில், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு நேற்று காலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, சோமசேகர், பைரதி பசவராஜ், மகேஷ் குமட்டள்ளி, சுதாகர், பி.சி.பட்டீல், கோபாலய்யா மற்றும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களான முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீல் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத்தும் வந்திருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும், முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசினார்கள். அப்போது இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்காக எடியூரப்பாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பாவும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மந்திரிசபை விரிவாக்கம், மந்திரிபதவி ஏற்கும் தங்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்து எடியூரப்பாவுடன் அந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜிக்கும் மந்திரிபதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் அந்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.

குறிப்பிட்ட துறையை ஒதுக்க...

அத்துடன் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களான முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீல் மீது இருக்கும் வழக்குகளை திரும்ப பெறுவதற்கும், அவர்களது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கும், தங்களை போல அவர்களையும் இடைத்தேர்தலில் வெற்றி பெற வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடியூரப்பாவிடம் எம்.எல்.ஏ.க்கள் கூறியதாக தெரிகிறது. மேலும் முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீலுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும், அதற்காக மந்திரிசபையில் 2 பதவிகளை காலியாக வைக்க வேண்டும் என்றும் எடியூரப்பாவிடம் எம்.எல்.ஏ.க்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியும், சில எம்.எல்.ஏ.க்கள் மந்திரிசபையில் தங்களுக்கு குறிப்பிட்ட துறையை ஒதுக்கும்படியும் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையில், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு முதல் முறையாக முதல்-மந்திரி எடியூரப்பாவை எச்.விஸ்வநாத் சந்தித்தார். இதையடுத்து, எச்.விஸ்வநாத்திற்கு எடியூரப்பா ஆறுதல் கூறினார். மேலும் கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து சரியான பதவி வழங்குவதாகவும், அவரிடம் எடியூரப்பா உறுதி அளித்தார். எடியூரப்பாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த சோமசேகர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நெருக்கடி கொடுக்கவில்லை

“இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முதல் முறையாக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசியுள்ளோம். அவருடன் காலை உணவு சாப்பிட்டோம். இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு வெற்றி பெற்ற அனைவரும் ஒன்றாக சேர்ந்து முதல்-மந்திரியை சந்தித்து பேச முடிவு எடுத்தோம். அதன்படி, சந்தித்து பேசினோம். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரியுடன் எதுவும் பேசவில்லை. குறிப்பிட்ட துறையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் முதல்-மந்திரிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை.

அதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. மந்திரி பதவி மற்றும் துறைகள் ஒதுக்கும் விவகாரத்தில் மற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து நாங்கள் யாரும் போட்டிக்கு நிற்கவில்லை. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச வேண்டும் என்று எங்களது விருப்பத்தை முதல்-மந்திரியிடம் தெரிவித்தோம். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், அந்த கூட்டத்தொடர் முடிந்த பின்பு அமித்ஷாவை சந்தித்து பேசலாம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையாக இருக்கிறோம்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாங்கள் 17 பேரும் பா.ஜனதாவில் இணைந்துள்ளோம். நாங்கள் 17 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். 17 பேரில் ஒருவருக்கு கூட அநியாயம் ஏற்பட விடமாட்டோம். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத்திற்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீலுக்கும் மந்திரிபதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கேட்டுக் கொண்டோம்.

17 பேரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுபற்றி முதல்-மந்திரியிடம் தெரிவித்துள்ளோம். உங்களது உதவி இந்த அரசுக்கு தேவை, உங்களால் தான் எனது தலைமையிலான அரசு அமைந்துள்ளது, உங்களுடன் நான் இருப்பேன் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவும் தெரிவித்துள்ளார். மந்திரிசபை விரிவாக்கம், துறைகள் ஒதுக்குவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவும், பா.ஜனதா மேலிட தலைவர்களும் முடிவு எடுப்பார்கள்.”

இவ்வாறு சோமசேகர் கூறினார்.

Next Story