புதிதாக அமைக்கப்படும் மும்பை- நாக்பூர் அதிவிரைவு நெடுஞ்சாலைக்கு பால்தாக்கரே பெயர் சிவசேனா மந்திரி தகவல்


புதிதாக அமைக்கப்படும் மும்பை- நாக்பூர் அதிவிரைவு நெடுஞ்சாலைக்கு பால்தாக்கரே பெயர் சிவசேனா மந்திரி தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 8:40 PM GMT)

மும்பை- நாக்பூர் இடையே அமைக்கப்படும் அதிவிரைவு நெடுஞ்சாலைக்கு மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பெயர் சூட்டப்படும் என சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் மும்பை- நாக்பூர் அதிவிரைவு சாலை திட்டத்திற்கு கூடுதல் பங்கு முதலீடாக ரூ.3 ஆயிரத்து 500 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது நிலுவையில் உள்ள முதலீட்டுடன் இந்த கூடுதல் முதலீடு சேர்க்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், “மும்பை- நாக்பூர் இடையே அமைக்கப்படும் விரைவு சாலைக்கு மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பெயர் சூட்டப்படும்.

இதற்கு மந்திரிசபையில் உள்ள தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன” என்றார்.

10 மாவட்டங்களை இணைக்கும்

இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் மந்திரி சகன் புஜ்பால் கூறுகையில், “சாலைக்கு பெயர் சூட்டுவது தொடர்பான முன்மொழிவு மந்திரி சபையில் விவாதிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இது குறித்து முறையான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என்றார்.

நிதி தலைநகரான மும்பையையும் மாநிலத்தின் 2-வது தலைநகரம் என அழைக்கப்படும் நாக்பூரையும் இணைக்கும் இந்த பிரமாண்ட நெடுஞ்சாலை 701 கிலோமீட்டர் நீளமுள்ளதாகும். 10 மாவட்டங்கள், 26 தாலுகாக்கள் மற்றும் 390 கிராமங்கள் வழியாக செல்லும் இந்த அதிவேக நெடுஞ்சாலை இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை இப்போது 16 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ரூ.46 ஆயிரம் கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டு உள்ளது.

Next Story