காய்கறி விதைகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயம் - கலெக்டர் தகவல்


காய்கறி விதைகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2019 3:45 AM IST (Updated: 12 Dec 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கிராமப்புற காய்கறி உற்பத்தி திட்டத்தில் காய்கறி விதைகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில்,காய்கறி மற்றும் பழ பயிர்களின் உற்பத்தியை உயா்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2018-2019-ம் ஆண்டு தமிழகத்தில் 5 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் காய்கறி பயிர்களும் 7 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பழப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு 60 லட்சம் மெட்ரிக் டன் காய்கறிகளும் 57 லட்சம் மெட்ரிக் டன் பழங்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது முதல்-அமைச்சர் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுடியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புற காய்கறி உற்பத்தி் திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கரில் காய்கறி பயிர்கள் சாகுபடியையும் 5 ஏக்கர் பழப்பயிர்கள் சாகுபடியையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம பஞ்சாயத்தில் 100 விலையில்லா காய்கறி விதை துளைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஒரு விதை பாக்கெட்டில், கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகல், புடல் போன்ற ஏழு விதமான காய்கறி விதைகளும், இக்காய்கறிகளை சாகுபடி செய்வதற்கு தேவையான இயற்கை உரமும் இருக்கும்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 43,000 காய்கறி விதை பாக்கெட்டுக்கள் வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகின்றன. பழமரக்கன்றுகள் தேவைக்கு அருகில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அணுகலாம்.

இதுதவிர, தேசிய வேளாண்மை வளர்ச்சி் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், பழமரக்கன்றுகள், நிழல் வலைக்கூடங்கள், வேளாண்மை எந்திரங்கள், மண்புழு தயாரிப்பு மையம், தேனீ வளா்ப்பு, அறுவடைக்குப்பின் செய்வதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பாசனம் பெறும் சாகுபடி பரப்பை உயா்த்துவதற்காக, அரசு சொட்டு நீர்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர் பாசனத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் விவரங்களை மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story