குடிமராமத்து செய்யாததால், தொடர் மழை பெய்தும் நிரம்பாத கண்மாய் - தூர்வார விவசாயிகள் கோரிக்கை


குடிமராமத்து செய்யாததால், தொடர் மழை பெய்தும் நிரம்பாத கண்மாய் - தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2019 3:45 AM IST (Updated: 13 Dec 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே வளநாடு கிராமத்தில் உள்ள நொச்சி ஓடை கண்மாய் தூர்வாரப்படாததால் தொடர் மழை பெய்தும் நீர் தேங்காமல் உள்ளது. அதனை தூர்வாரி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ளது வளநாடு கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 250 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வந்தது. இங்குள்ள நொச்சி ஓடை கண்மாய்க்கு வரத்துக்கால்வாய் வழியாக மானாமதுரை கண்மாயில் இருந்து தண்ணீர் வரும். ஆனால் கண்மாயில் கடந்த 46 ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பாததால் இப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பலர் வேறு வழியின்றி வெளியூர் சென்று விட்டனர். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் கால்நடைகள் கூடவளர்க்க முடியாமல் விவசாயிகள் பலரும் செங்கல் சூளைகளில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். 100 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன.

இந்த கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்படவில்லை. இதனால் மழைநீர் இந்த கண்மாயில் தேங்காமல் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் ஓரளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் நொச்சி ஓடை கண்மாய் மட்டும் வறண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து விவசாயி தங்கச்சாமி கூறும்போது, பல ஆண்டுகளாக கண்மாயில் தண்ணீர் தேங்காததால் இன்று வரை விவசாயமே நடைபெறவில்லை. மானாமதுரை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும். ஆனால் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் கால்வாய் இருந்த இடமே தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தின் பல கண்மாய்கள் தூர்வாரப்பட்டு மழை நீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கண்மாய் இன்னும் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே நொச்சி ஓடை கண்மாயையும் தூர்வாரி வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story