குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேர் கைது


குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2019 4:00 AM IST (Updated: 13 Dec 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை, 

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மேலராஜ வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. இளைஞர் அணியினர் குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பஸ்சில் வந்த பயணிகளுக்கும், தி.மு.க.வினருக்கு இடைேய சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் தி.மு.க.வினர் 40 பேரை கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் மண்டபத்தில் உள்ள தி.மு.க.வினருக்கு போலீசார் சார்பில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூர்வீகா, பிரகாஷ் மற்றும் போலீசார் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

அப்போது அவர்கள் ஒவ்வொருவரின் செல்போன்களிலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலின் பயன் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கத்துடன் விளக்கி கூறினார்கள். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்ட தி.மு.க.வினருக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுக்கோட்டை காவல்துறையினரின் செயல் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்று உள்ளது.

Next Story