வேட்புமனு தாக்கல் செய்ய, நடத்தை விதிகளை மீறி ஊர்வலமாக சென்ற அ.ம.மு.க.வினர் - போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்


வேட்புமனு தாக்கல் செய்ய, நடத்தை விதிகளை மீறி ஊர்வலமாக சென்ற அ.ம.மு.க.வினர் - போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 8:24 PM GMT)

கம்பத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வேட்புமனு தாக்கல் செய்ய அ.ம.மு.க.வினர் ஊர்வலமாக சென்றதுடன், தடுத்து நிறுத்திய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கம்பம், 

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கும், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம்-குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் என தேர்தல் அலுவலர்கள், அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைைமயில் இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, முத்துமணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் இளையநம்பி, மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன் தலைமையில் அ.தி.மு.கவினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் மதியம் 1 மணி அளவில் அ.ம.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக அக்கட்சியினர், ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ரபீக் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். இதனை பார்த்த போலீசார், ஊர்வலமாக செல்வது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறி அ.ம.மு.க.வினரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தால் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதம் செய்த அ.ம.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கூட்டமாகவோ, ஊர்வலமாகவோ செல்ல அனுமதியில்லை. வேட்பாளருடன் முன் மொழிபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story