சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை - தஞ்சையில், அரசு டாக்டர்கள் சாதனை


சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை - தஞ்சையில், அரசு டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 13 Dec 2019 10:23 PM GMT (Updated: 13 Dec 2019 10:23 PM GMT)

உணவு குழாய், சுவாசக்குழாய் ஒட்டி அழுகியதால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு அளித்து தஞ்சையில் அரசு டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை தோப்புத்தெருவை சேர்ந்தவர் ஜோதிபாஸ். ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜமுனாராணி. இவர்களுடைய மகன் வெங்கடேசன்(வயது17). இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிவேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசனை அவரது தாய் ஜமுனாராணி திட்டினார். இதனால் கோபித்து கொண்டு அவர் வி‌‌ஷத்தை குடித்துவிட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். இதனால் மருத்துவமனையில் இருந்து அவரை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் உணவு சாப்பிடும்போது அந்த உணவு சுவாசக்குழாய்க்கு சென்று புரையேறியதால் அவர் தொடர்ந்து சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை மீண்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது உணவு குழாயும், சுவாசக்குழாயும் ஒன்றோடு ஒன்று ஒட்டி, ஓட்டை விழுந்து அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நுரையீரலிலும் சளி அதிகஅளவில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 13-ந் தேதி இதய சிகிச்சை டாக்டர்கள் குமரவேல், அரவிந்தன், மயக்க மருந்து டாக்டர்கள் குமரன், பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் வெங்கடேசனின் மார்பு பகுதியை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சையின்போது உணவு குழாய், சுவாசக்குழாயில் அழுகிய பகுதியை டாக்டர்கள் நீக்கிவிட்டு, இரு குழாய்களையும் தனித்தனியாக பிரித்து பின்னர் உணவு குழாயின் இருபகுதியையும், சுவாசக்குழாயின் இருபகுதியையும் ஒன்றாக இணைத்து தையல் போட்டனர். இந்த அறுவை சிகிச்சை 4 மணிநேரம் நடந்தது. பின்னர் தொடர் கண்காணிப்பில் இருந்த வெங்கடேசன் தற்போது பூர்ண குணம் அடைந்துவிட்டார். அவரால் உணவு சாப்பிட முடிகிறது.

அவரை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், கண்காணிப்பாளர் பாரதி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, பெற்றோர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் கூறும்போது, இதுபோன்ற அறுவை சிகிச்சை இதற்கு முன்பு செய்ய வேண்டும் என்றால் சென்னைக்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் உணவு குழாய், சுவாசக்குழாய் ஒட்டி, அழுகி இருந்ததை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

முதன்முதலாக தஞ்சையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அறுவை சிகிச்சையாகும். சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை பாராட்டுகிறேன் என்றார்.

Next Story