பிப்ரவரி 5-ந் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகம்: அடுத்த மாதம் 27-ந் தேதி பூர்வாங்க பூஜை தொடக்கம் - கலெக்டர் தகவல்


பிப்ரவரி 5-ந் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகம்: அடுத்த மாதம் 27-ந் தேதி பூர்வாங்க பூஜை தொடக்கம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2019 5:00 AM IST (Updated: 14 Dec 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

பிப்ரவரி 5-ந் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, அடுத்த மாதம் 27-ந் தேதி பூர்வாங்க பூஜை தொடங்க உள்ளதாக, கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

பிப்ரவரி 5-ந் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அடுத்தமாதம் (ஜனவரி) 27-ந் தேதி பூர்வாங்க பூஜை தொடங்குகிறது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை பெரியகோவிலில் சோழ, பாண்டிய, நாயக்கர், மராட்டிய மன்னர்களின் காலங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த 1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதியும், 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதியும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு முன் நிகழ்வான பூர்வாங்க பூஜை அடுத்தமாதம்(ஜனவரி) 27-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ந் தேதி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.

முதல் கால யாகசாலை பூஜை 1-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை 2-ந் தேதியும், 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை 3-ந் தேதியும், 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜை 4-ந் தேதியும், 8-ம் கால யாகசாலை பூஜை 5-ந் தேதி காலையிலும் நடக்கிறது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பு கும்பாபிஷேக உண்டியல் என்ற வாசகத்துடன் கூடிய 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஏராளமானோர் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

Next Story