துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் கிராம நிர்வாக அதிகாரி பலி


துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் கிராம நிர்வாக அதிகாரி பலி
x
தினத்தந்தி 15 Dec 2019 4:45 AM IST (Updated: 14 Dec 2019 9:09 PM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் கிராம நிர்வாக அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி கல்லாமேடு அருகே உள்ள அக்குலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 31). இவர் மணப்பாறையில் உள்ள செவலூர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று மதியம் தனது அண்ணன் செண்பகராஜை (33) அழைத்துக்கொண்டு அக்குலம்பட்டியில் இருந்து மணப்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியில் சென்றபோது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ்குமார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய அண்ணன் படுகாயம் அடைந்தார்.

சாலை மறியல்

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே விபத்து பற்றி கேள்விப்பட்ட சுற்றுப்புற கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் திரண்டனர். மேலும் வளநாடு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், ரமேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்க முயன்றனர்.

அப்போது, அவருடைய உடலை எடுக்கவிடாமல் பொதுமக்கள் தடுத்தனர். அத்துடன், கல்லாமேடு பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் அதிக விபத்துகள் நடந்து இருப்பதாகவும், இதில் சிலர் உயிரிழந்து இருப்பதாகவும், எனவே விபத்தை தடுக்க இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் சாலையின் குறுக்கே குப்பை தொட்டிகள் மற்றும் சில பொருட்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயதேவி (துவரங்குறிச்சி), கண்ணதாசன் (மணப்பாறை) மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மறியல் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதனால் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருமார்க்கத்திலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சில கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. இதுமட்டுமின்றி கிராம நிர்வாக அதிகாரியின் உடலும் சாலையிலேயே கிடந்தது. பின்னர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது, முதலில் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்னர் உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து ரமேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story