கள்ளக்குறிச்சியில் தடையை மீறி தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - 128 பெண்கள் உள்பட 271 பேர் கைது


கள்ளக்குறிச்சியில் தடையை மீறி தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - 128 பெண்கள் உள்பட 271 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 5:33 PM GMT)

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 128 பெண்கள் உள்பட 271 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மந்தைவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என தெரிகிறது. இருப்பினும் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நேற்று தடையை மீறி கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாலிக்பா‌ஷா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்துல் அயம், மாவட்ட மருத்துவரணி செயலாளர் கம்ரூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் முகமதுஅலி கண்டன உரையாற்றினார்.

இதில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினரிடம் கூறினர். அப்போது போலீசாருக்கும் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது குறைந்தளவே போலீசார் இருந்ததால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் போலீசார் வந்து 128 பெண்கள் உள்பட 271 பேரை கைது செய்து, வேன்களில் ஏற்றி சென்று, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதையடுத்து கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story