நாகர்கோவிலில் ராகுல்காந்தி உருவபொம்மையை எரித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம்


நாகர்கோவிலில் ராகுல்காந்தி உருவபொம்மையை எரித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2019 4:30 AM IST (Updated: 15 Dec 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ராகுல்காந்தி உருவபொம்மையை எரித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்து பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் இந்த பிரச்சினை நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது.

இந்தநிலையில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகில் நேற்று பா.ஜனதா கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேக் இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த ராகுல்காந்தியை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் கோ‌‌ஷங்களை எழுப்பி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உருவ பொம்மை எரிப்பு

போராட்டத்துக்கு முன்னாள் கவுன்சிலர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் தேவ், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென ராகுல் காந்தியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உருவ பொம்மையின் மீது பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story