மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: நகைக்கடையில் 140 பவுன் கொள்ளை


மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: நகைக்கடையில் 140 பவுன் கொள்ளை
x
தினத்தந்தி 16 Dec 2019 4:45 AM IST (Updated: 16 Dec 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் அருகே நகைக்கடையில் மர்ம நபர் புகுந்து 140 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழித்துறை,

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் கிறிஸ்ேடாபர் (வயது 45). இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நகை கடை நடத்தி வருகிறார். கடையின் பின்பகுதியில், ஒரு சிறிய வீடு உள்ளது. அந்த வீட்டில் கிறிஸ்டோபர் அவ்வப்போது குடும்பத்துடன் தங்குவது வழக்கம். வீட்டில் இருந்து நகை கடைக்குள் செல்ல பின்பகுதியில் ஒரு கதவு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு கிறிஸ்டோபர் கடையை பூட்டிவிட்டு, பின்னால் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கினார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் கிறிஸ்டோபரின் மனைவி சாந்தி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். பின்னர், கதவை பூட்டாமல் அப்படியே திறந்து வைத்திருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த ஒரு வாலிபர் கடையின் உள்ளிருந்து வீட்டின் கதவு வழியாக வேகமாக ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தூங்கி கொண்டிருந்த கணவர் கிறிஸ்டோபரை எழுப்பி நடந்ததை கூறினார். கிறிஸ்டோபர் அந்த வாலிபரை துரத்தி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் வாலிபர் வேகமாக தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து கிறிஸ்டோபர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது, ரேக்குகள் திறந்து கிடந்தன. அவற்றில் வைத்திருந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம் என மொத்தம் 140 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

இதுகுறித்து கிறிஸ்டோபர் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் நகைக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் நகைக்கடையில் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு மீண்டும் நகைக்கடைக்கே திரும்பி வந்தது.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலையம் அருகிலேயே நகைக்கடையில் துணிகர கொள்ளை நடந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story