தேனி அருகே, ‘ஷூ’வுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவி


தேனி அருகே, ‘ஷூ’வுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவி
x
தினத்தந்தி 17 Dec 2019 5:00 AM IST (Updated: 16 Dec 2019 9:25 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பள்ளி மாணவியின் ‘ஷூ’வுக்குள் நல்ல பாம்பு பதுங்கியிருந்தது. பாம்பு இருந்ததை முன்கூட்டியே பார்த்ததால் அந்த மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாள்.

தேனி,

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவருடைய மகள் அவந்திகா (வயது 9). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவந்திகா தனது ‘ஷூ’, வை வீட்டுக்கு வெளியே கழற்றி போட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக அவள் தனது புத்தக பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அதன்பிறகு அவசர, அவசரமாக தனது ‘ஷூ’வை எடுத்து காலில் மாட்ட முயன்றாள். அப்போது ‘ஷூ’வுக்குள் இருந்து சத்தம் வந்தது. உடனே அதற்குள் அவள் பார்த்தபோது அதில் ஒரு பாம்பு சுருண்ட நிலையில் பதுங்கி இருந்தது. இதைப் பார்த்து அபயகுரல் எழுப்பிய அவந்திகா, உடனே அந்த ‘ஷூ’வை கீழே வீசினாள். மேலும் இதுகுறித்து அவள் தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.

பின்னர் அவளது பெற்றோர், பாம்பு பதுங்கியிருந்த ‘ஷூ’வின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து மூடினர். மேலும் இதுகுறித்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவர், ‘ஷூ’வுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை அவர் தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் கொண்டுப்போய் விட்டார்.

பாம்பு பதுங்கி இருந்ததை முன்கூட்டியே கவனித்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த மாணவி உயிர் தப்பினாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story