பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து; ஆவணங்கள் எரிந்து நாசம்
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் 4-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ஆவணங்கள் எரிந்து நாசமானது.
பெங்களூரு,
பெங்களூரு கலாசிபாளையம் அருகே கே.ஆர்.ரோடு ஜங்ஷனில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் முன்பாக அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், நிதி மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள கார்கோ நிறுவனத்தில் நேற்று காலை 9.45 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது.
அந்த தீ மளமளவென நிறுவனத்தில் இருந்த பொருட்களில் பிடித்து எரிந்தது. மேலும் அதே 4-வது மாடியில் உள்ள மேலும் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் வேறொரு நிறுவனத்திற்கும் தீ பரவி எரிந்தது. அந்த நிறுவனத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. ஆனால் கட்டிடத்தின் மற்ற தளங்களில் இருந்தவர்கள் முன்எச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் 4-வது மாடியில் பிடித்த தீயை அணைக்க வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரத்திற்கும் மேலாக போராடி கட்டிடத்தில் பிடித்த தீயை அணைத்தார்கள். ஆனாலும் 4-வது மாடியில் செயல்பட்டு வந்த நிறுவனங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக கட்டிடத்தில் தீப்பிடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்து சம்பவத்தில் 4-வது மாடியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கலாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story