கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனுகொடுக்க சாராய பாக்கெட்டுகளுடன் வந்த விவசாயி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனுகொடுக்க விவசாயி ஒருவர் சாராய பாக்கெட்டுகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்ட மக்கள்குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டவருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் அணைக்கட்டு தாலுகா மேல் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேசிய உழவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சதானந்தம் என்பவர் கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அப்போது ஒரு சாக்குப்பையில் 100-க்கும் மேற்பட்ட காலி சாராய பாக்கெட்டுகளுடன் வந்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்துவாச்சாரி போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோரிக்கை மனுவை மட்டும் கொடுத்துவிட்டு சென்றார். அவர் கொடுத்துள்ள மனுவில் மேல் அரசம்பட்டு கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒருவர் முருகன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் பகுதிகளில் சாராயம் விற்று வருவதாகவும், ஊரில் ரவுடியாக செயல்படுவதாகவும் கூறி உள்ளார்.
மேலும் சாராயம் விற்பதால் அதைவாங்கி குடிப்பவர்கள் கோவிலில் உள்ள பொருட்களை திருடிச்சென்றுவிடுவதாகவும், இதுகுறித்து பலமுறை வேப்பங்குப்பம் போலீஸ்நிலையத்தில் புகார்கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாராயம் விற்பவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அவர், சாராய பாக்கெட்டுகளுடன் மனுகொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோன்று காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் ஓட்டல் நடத்திவரும் ஒருவர் மனுகொடுக்க வந்தார். அவர் வரும்போதே எனது மனைவியை மானபங்கம் செய்த தேசியநெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒழிக என்று கூச்சலிட்டபடி வந்தார். இதனால் அங்கு கூட்டம் கூடத்தொடங்கியது. உடனடியாக அவரை போலீசார் ஆட்டோவில் ஏற்றி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அங்குவைத்து அவரிடம் விசாரணை நடத்திவிட்டு பின்னர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துவந்து மனுகொடுக்கவைத்தனர். இந்த சம்பவத்தாலும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வடுகந்தாங்கல் பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர்கள் கொடுத்துள்ள மனுவில் வடுகந்தாங்கல் ஏரிப்பகுதியில் 20 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டாவோ, வீடோ கிடையாது. எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி, அரசுசார்பில் இலவச வீடுகட்டிகொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கூட்டத்தில் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து அதன்மூலம் இருசக்கர வாகனத்தை இயக்குவதை கண்டுபிடித்த பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவன் தேவேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story