உத்தமபாளையம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை: அ.தி.மு.க., தி.மு.க.வினர் எதிர்ப்பால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி

உத்தமபாளையம் ஒன்றிய கவுன்சிலர் பதவி வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, அ.தி.மு.க., தி.மு.க.வினர் எதிர்ப்பால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க., தி.மு.க. 10 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதேபோல் அ.ம.மு.க. சார்பில் 9 இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் 2 இடங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தனர்.
இந்தநிலையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒவ்வொரு வார்டுகள் வாரியாக வேட்பாளர்களை வரவழைத்து வேட்புமனுக்கள் மீது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி முருகேசன் தெரிவித்தார். அதன்பேரில் ஒவ்வொரு வேட்பாளரின் வேட்புமனு குறித்து வாசித்தார். அதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 5-வது வார்டு (உ.அம்மாபட்டி) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுவை உதவி தேர்தல் அதிகாரி வாசித்தார். வேட்பாளர் மகேஸ்வரனை 2 பேர் முன்மொழிந்து இருந்தனர். முன்மொழிந்தவரின் வாக்காளர் வரிசை எண் 110 சரவணன் என்று வாசித்தார்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், வரிசை எண் 110-ல் சரவணன் பெயர் இல்லை. எனவே அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து அங்கு இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அ.தி.மு.க. வக்கீல் முத்துகுமரன் வேட்பு மனு முறையாக பூர்த்தி செய்யவில்லை. எனவே மனுவை ஏற்று கொள்ளக்கூடாது என்றார். அ.தி.மு.க., தி.மு.க.வினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி முத்தையன் வேட்புமனு குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் மனுவை முறையாக பூர்த்தி செய்யாததால் வேட்புமனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனை ஏற்று கொண்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள் குறித்து முறையாக எழுதி கொடுங்கள் என்றார். அதன்பேரில் தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






