குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் எதிரில் நடைபெற்றது. இதற்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை தாங்கினார். சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன், நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன், மகளிர் அணி அமைப்பாளர் காசியம்மாள், ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயகுமார், அகிலன், மணி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் கமால் பாஷா, வேலுமணி, ராஜாமணி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ஜெயகுமார் வரவேற்றார்.
இதில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், பா.ஜனதா அரசுக்கு துணை போகும் வகையில் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த அ.தி.மு.க.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாவட்ட அவைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத் குமார், கொடியரசி, நெசவாளர் அணி அமைப்பாளார் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்மாசி, கருணாநிதி, நகர செயலாளர்கள் பாஷா, காசிவிஸ்வநாதன் மாவட்ட பிரதிநிதி தங்கவேலு உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story