முல்லைப் பெரியாற்றில் குளித்த மூதாட்டி அடித்துச்செல்லப்பட்டார் - தேடும் பணியில் தொய்வு; உறவினர்கள் மறியல்
கம்பம் முல்லைப் பெரியாற்றில் குளித்த மூதாட்டி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டதால் போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம்,
கம்பம் நேருஜி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி புஷ்பம் (வயது 70). இவர், கம்பம்-சுருளிப்பட்டி சாலை, தொட்டன்மன் துறை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் நேற்று முன்தினம் மதியம் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் மூதாட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மூதாட்டியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் இரவு வரை தீயணைப்பு படையினர் தேடியும் மூதாட்டி கிடைக்காததால், தேடும் பணியை நிறுத்தினர்.
பின்னர் மீண்டும் நேற்று காலை தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் தலைமையில் கம்பம் காமயகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றில் மூதாட்டியை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நிறுத்தினால் மட்டுமே மூதாட்டியை தேட முடியும் என தீயணைப்புத்துறையினர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் நேற்று நண்பகல் வரை தண்ணீரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மூதாட்டியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு கம்பம்-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜா, மறியலில் ஈடுபட்ட புஷ்பத்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தீயணைப்புத்துறையினர், போலீசார், தன்னார்வலர்கள் மூலம் மூதாட்டியை தேடும் பணி தீவிரப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து மூதாட்டியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story