மணப்பாறை அருகே மொபட்டில் சென்ற முன்னாள் கவுன்சிலர் பலி 8 வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு


மணப்பாறை அருகே மொபட்டில் சென்ற முன்னாள் கவுன்சிலர் பலி 8 வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 18 Dec 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே மொபட்டில் சென்ற முன்னாள் கவுன்சிலர் பலியானார். இதனை பார்த்த கிராம மக்கள் ஆத்திரத்தில் 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தனர்.

மணப்பாறை,

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட செவலூர் மேற்குத் தெருவை சேர்ந்தவர் முத்துவீர லெக்கப்ப கவுண்டர் (வயது 74). முன்னாள் கவுன்சிலரான இவர் அந்த பகுதி நாட்டாண்மையாகவும் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் எடுப்பதற்காக மொபட்டில் அருகில் உள்ள இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் செவலூரில் இருந்து விடத்திலாம்பட்டிக்கு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிக் கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அந்த வழியாக வந்தது. லாரி வருவதை பார்த்ததும் சற்று தொலைவில் முத்துவீர லெக்கப்ப கவுண்டர் மொபட்டை நிறுத்தினார். அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துவீர லெக்கப்ப கவுண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு முத்துவீர லெக்கப்ப கவுண்டர் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், ஆத்திரத்தில் அந்த வழியாக வந்த 8 வாகனங்களின் கண்ணாடி களை உடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் கண்ணதாசன் (மணப்பாறை), சண்முகசுந்தரம் (வையம்பட்டி) மற்றும் போலீசார் வந்து உடலை மீட்க முயன்றனர். அப்போது கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு கவனக்குறைவாக பின்னோக்கி வந்ததால்தான் முத்துவீர லெக்கப்ப கவுண்டர் பலியாகி விட்டார். ஆகவே, டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலைப்பணியால் ஏற்கனவே 4 பேர் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். சாலை அமைக்கும் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால் தான் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது என்று கூறினர்.

அதற்கு போலீசார் தரப்பில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சாலைப்பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், முத்துவீர லெக்கப்ப கவுண்டர் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே லாரி டிரைவர் கரூர் மாவட்டம் கட்டபுளிப்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் மணப்பாறை போலீசில் சரணடைந்தார். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story