கோவை அருகே, ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற 3 புரோக்கர்கள் கைது - தம்பதியிடம் தீவிர விசாரணை


கோவை அருகே, ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற 3 புரோக்கர்கள் கைது - தம்பதியிடம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2019 10:45 PM GMT (Updated: 18 Dec 2019 5:23 PM GMT)

கோவை அருகே ரூ.3 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்ற 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையை அடுத்த மதுக்கரையை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவர் மதுக்கரை கிளை தி.மு.க. தொழிற்சங்க துணை செயலாளர் ஆவார். இவருடைய நண்பருக்கு குழந்தை இல்லை. இதனால் அவர், ஜாகீர் உசேனிடம் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஜாகீர் உசேன் ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த ஹசீனா (35), சூரம்பட்டியை சேர்ந்த கல்யாணி (35) ஆகியோரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரிந்தவரிடம் ஒரு குழந்தை இருப்பதாகவும், ஆண் குழந்தை என்றால் ரூ.3 லட்சமும், பெண் குழந்தை என்றால் ரூ.2 லட்சமும் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதை ஜாகீர் உசேன் தனது நண்பரிடம் தெரிவித்தார். உடனே அவர் ஆண் குழந்தை வேண்டும் என்று கூறி ரூ.3 லட்சத்தை ஜாகீர் உசேனிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட ஜாகீர்உசேன், ஹசீனா, கல்யாணி ஆகியோரை தொடர்பு கொண்டு, பணம் தயாராக இருப்பதாகவும், ஆண் குழந்தை வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஹசீனா, கல்யாணி ஆகியோர் ஜாகீர் உசேனை தொடர்பு கொண்டு கோவை அருகே கருமத்தம்பட்டியில் ஆண் குழந்தையுடன் இருப்பதாகவும், பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கி செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.

அதன்பேரில் ஜாகீர்உசேன் அங்கு சென்று அவர்களை சந்தித்தார். அப்போது அவர்கள், பிறந்து 40 நாட்களே ஆன ஆண் குழந்தையை காண்பித்தனர். உடனே அவர், குழந்தையை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும், மாலையில் சூலூருக்கு வந்து பணத்தை கொடுத்து விட்டு குழந்தையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதன்படி ஜாகீர் உசேன் சூலூருக்கு சென்ற போது ஹசீனா, கல்யாணி ஆகியோர் ஒரு காரில் அங்கு வந்தனர். அதற்குள் குழந்தையின் பெற்றோரான மதுரையை சேர்ந்த கண்ணன் (36), கோமதி (30) ஆகியோர் இருந்தனர். உடனே அந்த காரில் ஜாகீர் உசேன் ஏறியதும் அவர்கள் கோவையை நோக்கி வந்தனர்.

அப்போது காருக்குள் இருந்த ஹசீனா உள்பட 4 பேரும், குழந்தையை கொடுக்க ரூ.3 லட்சம் கேட்டனர். அதற்கு அவர், தன்னிடம் ரூ.2 லட்சம்தான் இருக்கிறது, அதை வைத்துக்கொண்டு குழந்தையை கொடுத்தால் மீதி பணத்தை விரைவில் தந்து விடுவதாக கூறி உள்ளார்.

இதனால் அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்தனர். அப்போது ஜாகீர்உசேன், தனக்கு கமிஷன் வேண்டும் கேட்டார். அதற்கு அவர்கள் மீதி பணத்தை கொடுக்கும்போது கமிஷன் தருவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே கோவை திருச்சி ரோடு பாப்பம்பட்டி பிரிவு அருகே கார் சென்ற போது டிரைவர் திடீரென்று காரை நிறுத்தினார். இதனால் காரில் இருந்து இறங்கிய அவர்கள், ரோட்டோரம் நின்று பணத்தை பிரிப்பது தொடர்பாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதை பார்த்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணை யில், அவர்கள் குழந்தையை விற்பனை செய்யும் கும்பல் என்பதும், கண்ணன், கோமதி ஆகியோர் தங்களின் குழந்தையை விற்க வந்த தம்பதி என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் அனைத்தும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குள் நடந்ததால் அவர்கள் 5 பேரும் குழந்தையுடன் கருமத்தம்பட்டி போலீசாரி டம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதை அறிந்த குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் ஜாகீர் உசேன், ஹசீனா, கல்யாணி ஆகிய 3 பேரும் குழந்தைகளை விற்பனை செய்யும் புரோக்கர்கள் என்பதும் அவர்கள் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். விற்கப்பட்ட குழந்தை கண்ணன்-கோமதி தம்பதியிடம் ஒப்படைக்கப் பட்டது. மேலும் அந்த தம்பதியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story