நாமக்கல்லில் திருட்டு போன ரூ.22 லட்சம் மதிப்பிலான லாரி மீட்பு 3 பேர் கைது


நாமக்கல்லில் திருட்டு போன ரூ.22 லட்சம் மதிப்பிலான லாரி மீட்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2019 4:30 AM IST (Updated: 20 Dec 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் திருட்டு போன ரூ.22 லட்சம் மதிப்பிலான லாரியை மீட்ட போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் கங்காநகரை சேர்ந்தவர் செல்வராசு (வயது 44). லாரி உரிமையாளர். இவரது லாரியை செவந்திப்பட்டியை சேர்ந்த டிரைவர் நாகராஜ் ஓட்டி வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி தீபாவளி அன்று நாகராஜ், நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள செல்வராசுக்கு சொந்தமான பேட்டரி கடை முன்பு லாரியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் மற்றொரு டிரைவரான தனபாலிடம் உரிமையாளர் செல்வராசு கோவில்பட்டிக்கு தீப்பட்டி லோடு ஏற்ற லாரியை எடுத்து செல்லுமாறு கூறினார்.

இதையடுத்து மறுநாள் அதிகாலை 5 மணிக்கு லாரியை ஓட்டி செல்ல தனபால் சென்றார். அப்போது லாரி திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து செல்வராசுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து செல்வராசு நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் கைது

இதற்கிடையே திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீசார் மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிய வழக்கில் நாமக்கல் அருகே உள்ள வேப்பனம்புதூர் சங்கர் (36), மதுரை ஆசிரியர் குடியிருப்பு சக்திவேல் (22), கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஜீவானந்தம் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேருக்கும் லாரி திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கர், சக்திவேல், ஜீவானந்தம் ஆகிய 3 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன ரூ.22 லட்சம் மதிப்பிலான லாரியை துறையூரில் உள்ள ஒரு பட்டறையில் இருந்து மீட்டனர்.

சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட 3 பேரும் நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி 3 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 3 பேர் மீதும் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story