தேனி மாவட்டத்தில், இந்த ஆண்டு 120 இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம்
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 120 இளம்வயது பெண்களுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
தேனி,
18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு திருமணம் செய்து வைத்தால் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் உள்பட திருமண ஏற்பாடு செய்த அனைவரும் அந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், தேனி மாவட்டத்தில் இளம்வயது பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வரும் புகார்களின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர், சமூக நலத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 120 இளம்வயது பெண்களின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இவர்களில் பலரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இந்த இளம்வயது திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, ‘பெற்றோர்களின் அறியாமைதான் முதல் காரணமாக இருக்கிறது. வறுமையின் காரணமாக பெற்றோர் சிலர் தங்களின் மகள்களுக்கு திருமண வயதை எட்டும் முன்பே திருமண ஏற்பாடு செய்கின்றனர். அத்துடன், பெண் குழந்தைகள் மீதான பயமும் முக்கிய காரணமாக உள்ளது. திரைப்படங்களை பார்த்துவிட்டு பள்ளி பருவத்திலேயே காதல் வயப்பட்டு வாழ்க்கையை தொலைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சில பெற்றோர் இதுபோன்ற முடிவுகளை எடுத்து விடுகின்றனர். 18 வயது பூர்த்தியாகும் முன்பு திருமணம் செய்து வைத்தால் அரசு நலத்திட்டங்கள் எதற்கும் விண்ணப்பிக்க முடியாது. சிறுமிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story