குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வரலாற்று துரோகம் செய்து விட்டனர்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வரலாற்று துரோகம் செய்து விட்டனர்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:45 AM IST (Updated: 21 Dec 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வரலாற்று துரோகம் செய்து விட்டனர் என்று ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., பேசினார்.

புதுக்கோட்டை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் அநீதியை எதிர்க்கும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் சதக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., மற்றும் எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், நவாஸ்கனி, திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் உள்பட தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க., ஆம் ஆத்மி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் வாழ்வுரிைம கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வேலையின்மை அதிகரிப்பு

ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

இந்தியாவில் 40 ஆண்டு காலம் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்து உள்ளது. நான் பட்டியலிட்ட எந்த ஒரு பிரச்சினைக்கும் பா.ஜ.க. தீர்வு காணவில்லை. அதற்கு பதிலாக முத்தலாக் பிரச்சினையை கையில் எடுத்து நிறைவேற்றியது. அதற்கு பின்னர் காஷ்மீர், அசாம் மாநில பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் பா.ஜ.க. கையிலெடுத்து மக்கள் மீது தொடர்ச்சியாக சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்தது.

தற்போது 4-வது சம்மட்டி அடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்துள்ளது. தற்போது நடைபெறும் போராட்டம் இந்திய இறையாண்மைக்கும், அரசுக்கும் உடனான போராட்டம். இந்திய அரசியல் சாசன சட்டத்தை பாதுகாத்தால் முஸ்லிம்கள் பாதுகாக்கப்படுவார்கள். நாட்டில் வாழும் ஒருவன் குடிமகன் இல்லை என்றால், அரசுதான் நிரூபிக்க வேண்டும், அதை மக்கள் நிரூபிக்க மாட்டார்கள்.

வரலாற்று துரோகம்

அ.தி.மு.க.வில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர் மனசாட்சி இல்லாமல் பா.ஜ.க.வோடு ஓடுகின்றனர். அவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறாமல் இருந்திருக்கும். அ.தி.மு.க. எம்.பி.க்கள் செய்தது வரலாற்று துரோகம். இந்த வரலாற்று துரோகத்தை நிதிஷ்குமாரும் செய்தார். தற்போது அதை அவர் மனசாட்சி உறுத்தியதால் மறுபரிசீலனை செய்து உள்ளார். அ.தி.மு.க.விற்கு மனசாட்சி உறுத்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை பார்த்தாவது அ.தி.மு.க.வின் மனசாட்சி உறுத்தும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் தங்களது கடைகளை ஆர்ப்பாட்டம் முடியும் வரை அடைத்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story