திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் 12 பேர் கைது


திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் 12 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 11:00 PM GMT (Updated: 21 Dec 2019 4:51 PM GMT)

திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜமாத் தலைவர் முகமதுஇலியா‌‌ஷ் தலைமை தாங்கினார்.

ஜமாத் நிர்வாகி முஜிபுர்ரகுமான் மற்றும் த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது குடியுரிமை சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

12 பேர் கைது

அதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானாவில் உள்ள பெரியார் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சிலையை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் சங்கத்தினர் வேலிக்குள் நுழைந்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சங்க மாநில துணை செயலாளர் பிரகா‌‌ஷ், மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் மற்றும் 4 மாணவிகள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடையடைப்பு

கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. லெட்சுமாங்குடி கடைவீதி, கூத்தாநல்லூர் ஆஸ்பத்திரி சாலை, மேல கடைத்தெரு, பெரிய கடைத்தெரு, ரேடியோ பார்க், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதி மக்கள் நட மாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story