குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தேனியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தும், இதை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும், முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நேற்று தேனி பங்களாமேட்டில் மாவட்ட உலமாக்கள் சபை, ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, அ.ம.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதரீதியான பிளவுகளுக்கு வழி செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தியும், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பலர் தேசிய கொடியுடன் கலந்துகொண்டனர். இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் அதை உடனே தடுத்து நிறுத்தி அந்த உருவ பொம்மையை பறித்து அருகில் இருந்த நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பயணியர் விடுதி பகுதியில் தூக்கி எறிந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஆத்திரமடைந்து பயணியர் விடுதிக்குள் தாங்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்குமார், சுருளிராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story