ஆவடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து


ஆவடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 23 Dec 2019 4:30 AM IST (Updated: 23 Dec 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஆவடி,

ஆவடி காமராஜர் நகர் ராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தர்மிசந்த் ஜெயின்(வயது 49). இவர், ஆவடி-பூந்தமல்லி சாலையில் ஜே.பி. எஸ்டேட் அருகே எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அவரது கடையில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவியது. கடையில் இருந்து புகை வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுபற்றி ஆவடி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி காலை 5 மணியளவில் தீயை அணைத்தனர். எனினும் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள், வயர், மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ், பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின. சேதமான பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தர்மிசந்த் ஜெயின் அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக் கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story