அரசியல் லாபத்துக்காக அல்ல: ஜனநாயகத்தை காப்பதற்காகவே சென்னையில் பேரணி நடத்துகிறோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு


அரசியல் லாபத்துக்காக அல்ல: ஜனநாயகத்தை காப்பதற்காகவே சென்னையில் பேரணி நடத்துகிறோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 23 Dec 2019 4:30 AM IST (Updated: 23 Dec 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி, அரசியல் லாபத்திற்காக அல்ல. ஜனநாயகத்தை காப்பதற்காக நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை, 

மதுரை புதூரில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது. மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்க பேராயர் அந்தோணி பாப்புசாமி, மதுரை-ராமநாதபுரம் திருமண்ட சி.எஸ்.ஐ. பேராயர் ஜோசப் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிறிஸ்துமஸ் விழாவில் கருணாநிதி எப்போதும் கலந்து கொள்வார். இப்போது நானும் இதில் கலந்து கொள்கிறேன். எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன் என்பதனை இங்கு சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல மட்டும் நான் இங்கு வரவில்லை. நாளை (இன்று) நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி வெற்றி பெற உங்களது வாழ்த்துக்களை பெற இங்கு வந்து இருக்கிறேன்.

இது சமத்துவ கிறிஸ்துமஸ் விழா. இந்தியா என்பது அனைத்து மதத்தினரும் வாழும் நாடு. அத்தனை பேரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. வேறுபாட்டினை போதிப்பதில்லை. இந்தியாவில் சமத்துவ சமுதாயமாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இயேசு கிறிஸ்து சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஒற்றுமை, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை போதித்து இருக்கிறார்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது தான் நீதி. இந்த உன்னத குணங்கள் அனைவருக்கும் இருந்தால் தான் நாடு சமத்துவ நாடாக இருக்கும். ஆனால் இன்று நமது சமத்துவத்திற்கு, ஒற்றுமைக்கு, சகோதரத்துவத்திற்கு குந்தகம் ஏற்படும் காரியங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதை தேச துரோகம் என்கிறார்கள். மதம் பார்த்து கருணை காட்டினால் தான் தேச பக்தி என்கிறார்கள்.

இந்தியா இது வரை கட்டிக்காத்த அனைத்து நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்து மோசமான இந்தியாவை உருவாக்்க நினைக்கிறார்கள். அதனால் தான் நாடு பற்றி எரிகிறது. இது பா.ஜனதாவிற்கும், எதிர்கட்சிகளுக்கும் நடக்க கூடிய போராட்டம் இல்லை. நீதிக்கும், அநீதிக்கும் நடக்கும் போராட்டம். மக்கள் பற்றி பேசினால் தான் தேச பக்தி. ஆனால் அவர்கள் பேச கூடாது என்கிறார்கள். பொருளாதாரத்தை வளர்த்து காட்டுங்கள் என்று சொல்கிறோம். ஆனால் அவர்கள் அதனை பற்றி பேச கூடாது என்று சொல்கிறார்கள்.

இதே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்று சொன்னார்கள். பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டி சென்றார். ஆனால் இதுவரை ஒரு பணி கூட நடக்கவில்லை.

குடியுரிமை சட்டம் ஒரு உன்னதமான சட்டம். ஒரு நாட்டில் வாழ முடியாமல் அகதியாக வருபவர்களுக்காக 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் தான் பா.ஜனதா அரசு திருத்தம் கொண்டு வந்து இருக்கிறது. அதில் அனைவருக்கும் குடியுரிமை என்று சொல்லி இருந்தால் அனைவரும் பாராட்டு, வாழ்த்து தெரிவித்து இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களை மட்டும் புறக்கணிக்கிறார்கள். எனவே தான் அதனை எதிர்த்து போராடி கொண்டு இருக்கிறோம். மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியுமா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து முஸ்லிம்கள் மட்டும் வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அதே போல் இலங்கையில் இருந்து ஈழத்ததமிழர்கள் வரக்கூடாது என்கிறார்கள். எனவே இது நமக்கு செய்யப்பட்ட இரட்டை துரோகம். தமிழர்களை பிரிப்பது நல்ல சட்டமா?. எனவே தான் இந்த சட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்தோம்.

மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால் பா.ஜனதா இந்த சட்டத்தை எளிதாக நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையில்அ.தி.மு.க. உறுப்பினர்கள் 11 பேர், பா.ம.க. ஒரு உறுப்பினர் என 12 பேர் சேர்ந்து இந்த சட்டத்தை வெற்றி பெற வைத்து இருக்கிறார்கள். இது குறித்து டெல்லியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள், இந்த சட்டம் நீங்கள் ஆதரித்ததால் தான் வெற்றி பெற்று இருக்கிறது என்று கேட்டார்கள். அதற்கு அவர், இது எங்கள் கொள்கை என்றார். மக்கள் போராடுகிறார்களே என்று கேட்டதற்கு அது மக்கள் கொள்கை என்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், கூட்டணி தர்மம் என்கிறார். கூட்டணி தர்மத்திற்காக அவர் காலில் கூட விழட்டும். ஆனால் ஜனநாயகத்திற்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவு தரலாமா.

இந்த சட்டம் கொண்டு வரும் போதே, அதில் முஸ்லிம்களையும், ஈழத்தமிழர்களையும் சேர்க்க வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்து விட்டார்கள். பிரதமர் மோடி போல எல்லா நாட்டிலும் இந்த சட்டத்தை கொண்டு வந்தால், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது.

நாளை (இன்று) சென்னையில் நடக்கும் பேரணி, மதசார்பற்ற அமைப்புகளின் சார்பாக நடத்துகிறோம். இது அரசியல் லாபத்திற்காக நடத்தவில்லை. ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம். நீதிக்கான போராட்டம். அந்த நீதிக்கான போராட்ட களத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேராயர்கள் எஸ்றா சற்குணம், டானியல் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story