வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்


வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:15 PM GMT (Updated: 23 Dec 2019 3:04 PM GMT)

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 69 ஆயிரத்து 125 வாக்காளர்கள் உள்ளனர்.

தேனி,

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார். வரைவு பட்டியலை கலெக்டரிடம் இருந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ரமே‌‌ஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) முத்தையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

வரைவு பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 69 ஆயிரத்து 125 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 531 ஆண்கள், 5 லட்சத்து 42 ஆயிரத்து 428 பெண்கள், 166 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 15 ஆயிரத்து 897 பேர் அதிகம் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,31,114, பெண்கள் 1,32,983, மூன்றாம் பாலினம் 23 என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,32,280, பெண்கள் 1,36,860, மூன்றாம் பாலினம் 97 என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 237 வாக்காளர்கள் உள்ளனர்.

போடி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,29,444, பெண்கள் 1,33,476, மூன்றாம் பாலினம் 16 என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,33,693, பெண்கள் 1,39,109, மூன்றாம் பாலினம் 30 என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 832 வாக்காளர்கள் உள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) முதல் அடுத்தமாதம் (ஜனவரி) 22-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் சரியான விவரங்களுடன் இடம் பெற்றுள்ளதா? என உறுதி செய்து கொள்ளலாம். அடுத்தமாதம் 22-ந்தேதி வரை சிறப்பு சுருக்க திருத்த பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன. 1-1-2020-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளிக்கலாம். மேலும் அடுத்தமாதம் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்பாக உரிய படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story