வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 598 வாக்காளர்கள்


வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 598 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 4:37 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 598 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தத்தின்படி 2020-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 43 ஆயிரத்து 726 பெண் வாக்காளர்களும், 48 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 12 லட்சத்து 78 ஆயிரத்து 598 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். இதில் கந்தர்வக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 96 ஆயிரத்து 858 ஆண் வாக்காளர்களும், 94 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 584 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை

இதேபோல் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 168 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 818 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 வாக்காளர்களும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 476 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 987 வாக்காளர்கள் உள்ளனர்.

திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 344 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 684 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 36 வாக்காளர்களும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 2 ஆயிரத்து 945 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 447 வாக்காளர்களும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 69 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

சிறப்பு முறை சுருக்க திருத்தத்தின் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக அடுத்த மாதம்(ஜனவரி) 4, 5, 11, 12-ந் தேதி ஆகிய 4 நாட்களில்(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம், 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களில் நடைபெறும். மேலும் 2020-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், குணசேகர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story