கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் மீண்டும் இணைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் மீண்டும் இணைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 4:48 PM GMT)

கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் மீண்டும் இணைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் சிறுத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவேப்பிலைப்பாளையம் கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இந்த நிலையில் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தின் ஒரு பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த கிராமத்தை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துடன் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதற்கு கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தின் மற்றொரு பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.பி.ஞானமூர்த்தி தலைமையில் சிறுத்தனூர் கிராம எல்லையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சென்னை-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், எங்கள் கிராமத்தில் இருந்து திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மிக அருகில் உள்ளது. இதனால் எங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சென்று வருவது மிக எளிதாக உள்ளது.

எனவே எங்கள் கிராமத்தை மீண்டும் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story