நெல்லையில் பழிக்குப்பழியாக நடந்த வாலிபர் கொலையில் 7 பேர் கைது - பரபரப்பு தகவல்


நெல்லையில் பழிக்குப்பழியாக நடந்த வாலிபர் கொலையில் 7 பேர் கைது - பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:15 PM GMT (Updated: 23 Dec 2019 7:03 PM GMT)

நெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேட்டை, 

நெல்லை பழைய பேட்டை அருகே உள்ள கண்டியபேரியை சேர்ந்தவர் சகாதேவன் மகன் இசக்கிமுத்து என்ற கணேச பாண்டியன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் காலை அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீக்குடிக்க சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மறைந்த இருந்த ஒரு கும்பல் ஓட, ஓட விரட்டி கணேசபாண்டியனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், குற்றவாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் தீபக் டாமோர் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் காசி பாண்டியன், விமலன், சாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.

தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் நாங்குநேரியை சேர்ந்த கண்ணன் மகன் நவீன் (19) என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த வெள்ளூரை சேர்ந்த பிச்சையா மகன் துரைமுத்து (26), நெல்லை தாழையூத்தை சேர்ந்த கணேசன் மகன் சுபா‌‌ஷ் (19), மேலச்செவலை சேர்ந்த பிச்சை மகன் லட்சுமிகாந்தன் (22), சேரன்மாதேவி சங்கரன்திரடு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முப்பிடாதி (24), ராமையன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மதன் (25), வெள்ளத்துரை மகன் முகே‌‌ஷ் (23) மற்றும் நவீன் ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்ட வெள்ளூரை சேர்ந்த துரைமுத்து போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது அண்ணன் கண்ணனை, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் ரெயில்வே கேட் அருகே வைத்து கணேசபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தனர். பழிக்குப்பழியாக கணேசபாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டேன். அவர் எங்கு வசித்து வருகிறார். எங்கு செல்கிறார் என்பதை நோட்டமிட்டேன்.

அப்போது, கணேசபாண்டியன் கண்டியபேரியில் வசித்து வந்தது தெரியவந்தது. நானும் எனது கூட்டாளிகளும் தென்காசி மெயின் ரோட்டில் பதுங்கி இருந்தோம். அவர் டீ குடிக்க கடைக்கு வரும் போது, அவரை வழி மறித்தோம். எங்களை பார்த்தவுடன் அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை விரட்டி சென்று வழி மறித்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட கணேசபாண்டியன் குடும்பத்துக்கு ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் பத்மபிரியா ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை வழங்கினார். அப்போது நெல்லை தாசில்தார் ராஜேசுவரி, மண்டல துணை தாசில்தார் பிரேமா, வருவாய் ஆய்வாளர் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story