எலக்ட்ரீசியன் வீட்டில் திருடிய மிட்டாய் வியாபாரி கைது - தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்


எலக்ட்ரீசியன் வீட்டில் திருடிய மிட்டாய் வியாபாரி கைது - தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:15 AM IST (Updated: 24 Dec 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் எலக்ட்ரீசியன் வீட்டில் தங்க நகைகளை திருடிய மிட்டாய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் திருட்டில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12-வது தெருவில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவர், சென்னையில் உள்ள காஞ்சி ஓட்டலில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கவுரி.

சம்பவத்தன்று இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டார். இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்மநபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிவது பதிவாகி இருந்தது. அந்த மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர், திருவொற்றியூர் வரதராஜபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி கிருஷ்ணன்(வயது 41) என்பது தெரியவந்தது.

அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர், மணிவண்ணன் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பூட்டிகிடந்த மணிவண்ணன் வீட்டை நோட்டமிட்டு, வீட்டின் பின்புறமாக ஏறி குதித்து பூட்டை உடைத்து திருடியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவரது வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்து 26 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story