எட்டயபுரம் அருகே, பெயிண்டரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு - 3 மர்மநபர்களுக்கு வலைவீச்சு


எட்டயபுரம் அருகே, பெயிண்டரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு - 3 மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:15 PM GMT (Updated: 23 Dec 2019 7:26 PM GMT)

எட்டயபுரம் அருகே பெயிண்டரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்து சென்ற 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எட்டயபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே குளத்துல்வாய்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ராஜ்குமார் (வயது 37). பெயிண்டரான இவர் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டு அடித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலையில் வேலை வி‌‌ஷயமாக கோவில்பட்டிக்கு சென்றார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் தனது பேண்ட் பையில் ரூ.40 ஆயிரம் வைத்து இருந்தார்.

எட்டயபுரம் அருகே குமாரகிரி புதூர் தனியார் பள்ளிக்கூடம் அருகில் சென்றபோது, அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரில் டிப்-டாப் உடை அணிந்த 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள், ராஜ்குமாரை தாக்கி, அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்தனர். பின்னர் அவர்கள், ராஜ்குமாரின் பேண்ட் பையில் இருந்த பணத்தையும் பறிக்க முயன்றனர்.

அப்போது சுதாரித்துக் கொண்ட ராஜ்குமார் அங்கு சோளம் பயிரிட்டிருந்த தோட்டத்துக்குள் புகுந்து இருளில் தப்பி ஓடினார். அவரை மர்மநபர்கள் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதனால் அவரது ரூ.40 ஆயிரம் பறிபோகாமல் தப்பியது. இதையடுத்து ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story