பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான கரும்புகள்


பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான கரும்புகள்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:00 AM IST (Updated: 24 Dec 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

அன்னவாசல்,

இலுப்பூர், சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, பெருஞ்சுனை, சிறுஞ்சுனை, செல்லுகுடி, குருக்களையாப்பட்டி, எல்லைப்பட்டி, நார்த்தாமலை, சித்துப்பட்டி, கூத்தினிப்பட்டி, இரும்பாளி, மேலூர், காவேரிநகர், கீழக்குறிச்சி, வயலோகம் உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த கரும்புகள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி அவற்றை விவசாயிகள் அறுவடை செய்வார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால், பல விவசாயிகள் கரும்பு உற்பத்தியில் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், இலுப்பூரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் மேட்டுச்சாலை, கடம்பராயன்பட்டி விளக்கு, சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி போன்ற இடங்களில் சில பகுதிகளில் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. அவற்றை தற்போது விவசாயிகளே வயல்வெளியையொட்டி உள்ள சாலையோரங்களில் வைத்து சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக செல்பவர்கள் வாங்கி செல்கின்றனர்.

அறுவடைக்கு தயார்

ஒரு சில இடங்களில், ஒரு கரும்பின் விலை ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், பத்து கரும்புகள் கொண்ட கட்டு ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் என விவசாயிகள் விற்பனை செய்ய தொடங்கி உள்ள னர். மற்ற பகுதிகளில் கரும்பு அறுவடையாகும்போது அவற்றின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கரும்பு ஓராண்டு கால பயிர். நாங்கள் கடந்த ஆண்டு பொங்கல் முடிந்தவுடன் கரும்பு சாகுபடி செய்தோம். அவை தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் பெரும்பாலான விவசாயிகள் இந்த ஆண்டு கரும்பு சாகுபடியை குறைத்து கொண்டனர். இதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே கடந்த ஆண்டை விட கூடுதல் விலைக்கு விற்றால்தான் ஈடுகட்ட முடியும். மேலும் விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு 2 அல்லது 3 நாட்கள் உள்ள நிலையில்தான் மொத்தமாக அறுவடை செய்வோம், என்றார்.


Next Story