பிரபல ரவுடி ஸ்ரீதர் இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி: காஞ்சீபுரத்தை தொடர்ந்து மிரட்டி வரும் ரவுடிகள் - பொதுமக்கள் பீதி


பிரபல ரவுடி ஸ்ரீதர் இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி: காஞ்சீபுரத்தை தொடர்ந்து மிரட்டி வரும் ரவுடிகள் - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 23 Dec 2019 11:15 PM GMT (Updated: 23 Dec 2019 8:14 PM GMT)

காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கூலிப்படையை சேர்ந்தவர்கள் கோஷ்டிகளாக பிரிந்து அவரது இடத்தை பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு கொலை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. மேலும், இவர் பல்வேறு ரவுடிகளை கூட்டாளியாக வைத்து கொண்டு தொழிலதிபர்கள் உள்பட பலரை மிரட்டி பணம் பறித்து வந்தார்.

இந்த நிலையில் ரவுடி ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சீபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். உடனடியாக போலீசார் ஸ்ரீதரை பிடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதையறிந்த ஸ்ரீதர், கம்போடியா நாட்டிற்கு தப்பி சென்றதாகவும், போலீஸ் அவரை நெறுங்குவதற்குள் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ரவுடி ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மத்தியில் அவரது இடத்தை பிடிப்பதில் ரவுடிகளுக்கிடையே போட்டா போட்டி ஏற்பட்டது. இதில் ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ், ஸ்ரீதரின் உறவினர் தணிகா, பொய்யாக்குளம் தியாகு ஆகியோர் தனிக்குழுக்களாக ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, காஞ்சீ புரம் பகுதிகளில் இவர்களுக் கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசாரும் கொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை அவ்வபோது தேடி கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரவுடிகள் தினேஷ், பொய்யாகுளம் தியாகு ஆகிய 2 ரவுடிகளையும், போலீசார் அவ்வப்போது கைது செய்து வந்தனர். பிரபல ரவுடி பொய்யாகுளம் தியாகு மீது, பல்வேறு கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டபஞ்சாயத்து, ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி தணிகாவையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ரவுடிகள் தினேஷ், தணிகா ஆகியோர் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், செய்யாறில் சதீஷ் என்ற வாலிபரும்், காஞ்சீபுரம் வணிகர் தெருவில், கருணாகரன் என்ற வாலிபரும் கொலை செய்யப்பட்டனர். ரவுடிகள் தனது அடியாட்கள் மூலம், மிரட்டல், மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் தனது அடியாட்களை ஏவிவிட்டு, ரவுடி தணிகாவின் கூட்டாளிகளான கோபி (வயது 25), ஜீவா (25), ஆகியோரை பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தார்.

இந்த சூழ்நிலையில், பிரபல ரவுடி ஸ்ரீதர் இடத்தை பிடிப்பதில், ரவுடிகள் தினேஷ், தியாகு, தணிகா ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். சுற்றுலா நகரும், கோவில் நகரமாகவும் போற்றப்படும் இந்த ரவுடி கும்பல்களின் அட்டூழியத்தால் நடந்து வரும் கொலை, கொலை முயற்சி சம்பவங்களால் காஞ்சீபுரம் மக்கள் ஒருவித பீதி மற்றும் அச்சத்துடன் நிம்மதி இழந்து வருகிறார்கள்.

கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஸ்ரீதர் உயிரிழந்த பின்னர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் இந்த ரவுடிகளால் அமைதியாக இருந்த காஞ்சீபுரம் ரவுடிகளின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

காஞ்சீபுரம் போலீசாரும், இந்த ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் விதமாக, நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். ரவுடிகளின் மீது என்கவுண்ட்டர் போன்ற கடுமையான சட்டம் பாய்ந்தால் தான், காஞ்சீபுரம் அமைதியான நிலைக்கு திரும்பும் என்று பொதுமக்களில் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Next Story