தர்மபுரியில் தேசிய கைப்பந்து போட்டி: கால் இறுதிக்கு 8 அணிகள் தேர்வு


தர்மபுரியில் தேசிய கைப்பந்து போட்டி: கால் இறுதிக்கு 8 அணிகள் தேர்வு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 8:47 PM GMT)

தர்மபுரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி யில் கால் இறுதிக்கு 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

தர்மபுரி,

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்கும் 65-வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், புதுச்சேரி, தெலுங்கானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கார், ஒடிசா உள்ளிட்ட 29 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

மின்னொளியில், லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளை திரளானோர் கண்டு களித்தனர். நேற்று நடந்த கால் இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்று இரவு வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் கால் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றன.

இறுதிபோட்டி

இன்று (செவ்வாய்க் கிழமை) காலை கால் இறுதி போட்டிகளும், மாலை அரை இறுதி போட்டிகளும் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) மாலை இறுதி போட்டி நடக்கிறது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்து உள்ளனர்.

Next Story