வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 13.97 லட்சம் வாக்காளர்கள் 7,016 பேர் புதிதாக சேர்ப்பு


வரைவு பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 13.97 லட்சம் வாக்காளர்கள் 7,016 பேர் புதிதாக சேர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி புதிதாக சேர்க்கப்பட்ட 7 ஆயிரத்து 16 வாக்காளர்களுடன் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 97 ஆயிரத்து 730 வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் மெகராஜ் இந்த பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 26.3.2019 முதல் 16.12.2019 வரை பொதுமக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டும், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டும் வரைவு வாக்காளர் பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

2,719 பேர் நீக்கம்

26.3.2019 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 13 லட்சத்து 93 ஆயிரத்து 433 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் பட்டியலில் 7,016 பேர் புதியதாக சேர்க்கப்பட்டும், 2,719 பேர் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டு உள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 923 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 14 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும், 122 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 97 ஆயிரத்து 730 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண்கள் வாக்காளர்கள் 31 ஆயிரத்து 762 பேர் அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக வழங்கப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டின் தொடர்ச்சியாக, வருகிற ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின்போது 1.1.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிறப்பு முகாம்கள்

மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம். மேலும் 4,5,11 மற்றும் 12-ந்தேதி சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். ராசிபுரம் சட்டசபை தொகுதியை பொறுத்த வரையில் புதிதாக 969 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 856 பேரும், நாமக்கல் தொகுதியில் 1,677 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 976 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 1,021 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 1,517 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதேபோல திருச்செங்கோடு உதவி கலெக்டர் அலுவலகத்தில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உதவி கலெக்டர் மணிராஜ் கலந்து கொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.


Next Story