அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.82 லட்சம் மோசடி, தந்தை-மகள் உள்பட 4 பேர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.82 லட்சம் மோசடி, தந்தை-மகள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2019 10:15 PM GMT (Updated: 24 Dec 2019 7:50 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.82 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை-மகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா தென்னம்பட்டியை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் கார்த்திக் (வயது 27). பட்டதாரியான இவர், அரசு வேலையில் சேருவதற்காக தேர்வுகள் எழுதி வருகிறார். இவர் உள்பட 13 பேர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகாரில், தென்னம்பட்டியை சேர்ந்த காளிராஜ் (56) என்பவர் மூலம் திண்டுக்கல் கே.பாறைப்பட்டியை சேர்ந்த முனியம்மாள் என்ற கனகதுர்கா (28), செட்டியபட்டியை சேர்ந்த அருள்சத்தியராஜ் (34) ஆகியோர் எங்களுக்கு அறிமுகம் ஆகினர். அப்போது தெரிந்த நபர்கள் மூலம் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

அதன்படி கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் அலுவலக உதவியாளர், டிரைவர் உள்ளிட்ட பணிகளை வாங்கி தருவதாக கூறினர். இதற்காக எங்களிடம் தனித்தனியாக பணம் பெற்றனர். அந்த வகையில் மொத்தம் ரூ.82 லட்சத்து 90 ஆயிரம் வாங்கினர். மேலும் அரசு பணி நியமன ஆணை போன்று போலியாக தயார் செய்து கொடுத்து ஏமாற்றி விட்டனர். எனவே, எங்களுடைய பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடே‌‌ஷ்பிரபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியம்மாள் என்ற கனகதுர்கா, காளிராஜ், அருள்சத்தியராஜ், காளிராஜ் மகள் ராஜே‌‌ஷ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரசு அதிகாரி ஒருவருக்கும் அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story