ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் கார் பாய்ந்தது; என்ஜினீயர் பலி 2 பேர் படுகாயம்


ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் கார் பாய்ந்தது; என்ஜினீயர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:45 PM GMT (Updated: 24 Dec 2019 8:10 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் கார் பாய்ந்த விபத்தில் என்ஜினீயர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

ராஜாக்கமங்கலம்,

நாகர்கோவில் தளவாய்புரம் சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் செபஸ்தியான். இவருடைய மகன் ஆன்றோ எமிலின் (வயது 32). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் ஆன்றோ எமிலின், சகோதரர் அசிக் அஸிஸ் மற்றும் ராமன்புதூரை சேர்ந்த நண்பர் அஸ்வின் ஆகியோருடன் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு காரில் வீடு நோக்கி புறப்பட்டார்.

கார் உப்பளத்தில் பாய்ந்தது

காரை ஆன்றோ எமிலின் ஓட்டினார். பின் இருக்கையில் அசிக் அஸிஸ், அஸ்வின் அமர்ந்திருந்தனர். அப்போது கார் ராஜாக்கமங்கலம் அருகே பண்ணையூர் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி யது. இதனால் கார் சாலையின் ஓரத்தில் உள்ள உப்பளத்தில் பாய்ந்தது.

இதில் காரில் இருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினர். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பலி

பின்னர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை அவர்கள் மீட்டனர். இதில் ஆன்றோ எமிலின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். தொடர்ந்து உயிருக்கு போராடிய மற்ற 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராஜாக்கமங்கலம் போலீசார் பலியான ஆன்றோ எமிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் உப்பளத்தில் பாய்ந்த விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story