திருப்பூரில் கொசுப்புழு இருந்ததால் கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - ஆக்கிரமிப்புகளும் இடித்து அகற்றம்


திருப்பூரில் கொசுப்புழு இருந்ததால் கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - ஆக்கிரமிப்புகளும் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 10:40 PM GMT)

திருப்பூரில் டெங்கு கொசுப்புழு இருப்பதாக கண்டறியப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடமும் இடித்து அகற்றப்பட்டது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு கமிஷனர் சிவக்குமார் உத்தரவிட்டார். இதன் பேரில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் மாநகர நல அலுவலர் பூபதி அறிவுறுத்தலின்படி கடந்த சில மாதங்களாக டெங்கு தடுப்பு பணிகளை அதிகாரிகளும், பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக கடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட 25-வது வார்டு மேட்டுப்பாளையத்தை அடுத்த முனியப்பன் கோவில் வீதியில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும், பணியாளர்களும் டெங்கு தடுப்பு ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருசில வீடுகளில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 6 வீட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல் அதே பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் தேங்கி இருந்த தண்ணீரிலும், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த டிரம்களிலும் ஏராளமான டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அந்த கட்டிடத்தின் முன்பகுதியில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்தும், மாநகராட்சி அனுமதியின்றியும் தரை கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கட்டிட உரிமையாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர் நோட்டீஸ் வாங்க மறுத்ததால் அதை அவருடைய கட்டிடத்தில் அதிகாரிகள் ஒட்டினார்கள்.

பின்னர் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த பகுதி பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டதுடன், கட்டிடத்திற்குரிய 2 குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் கட்டிடத்திற்கான மாநகராட்சி அனுமதியை ரத்து செய்வதற்கு சுகாதாரத்துறை மூலமாக பரிந்துரை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், டெங்கு தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story