தொடர் விடுமுறை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் - படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்


தொடர் விடுமுறை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் - படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 26 Dec 2019 4:15 AM IST (Updated: 25 Dec 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஊட்டி,

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி, சுற்றுலாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. சீசன் காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடியதை அடுத்து தமிழகத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையொட்டி தொடர் விடுமுறையை கழிக்கவும், குளு குளு காலநிலையை அனுபவிக்கவும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து பூங்காவின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இத்தாலியன் பூங்கா, கல்லாகிய மரம், இந்திய வரைப்படம், ஜப்பான் பூங்கா, இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கண்ணாடி மாளிகையில் 20-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த பல வண்ண மலர்களை கொண்ட பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள்.

ஊட்டி படகு இல்லத்தில் வழக்கத்தை விட நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். லேசான சாரல் மழை மற்றும் பனிமூட்டத்தின் நடுவே மிதி படகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகுகளில் சவாரி மேற்கொண்டனர். காட்சி மேடைகளில் நின்றவாறு ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படகு இல்ல வளாகத்தில் சுற்றுலா வாகனங்கள் நிரம்பி வழிந்ததால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி வருகின்றன. ஊட்டி-கூடலூர் சாலை பைக்காரா, சூட்டிங்மட்டம் பகுதிகளில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Next Story