அரியலூர் மாவட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை


அரியலூர் மாவட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 7:26 PM GMT)

அரியலூர் மாவட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் தேவாலயங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான அடைக்கல மாதா தேவாலயத்தில் ஏசு பிறப்பு கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏசு பிறக்கும் மாட்டுக்கொட்டகையை குடிலாக மக்களை கவரும் வண்ணம் அமைத்திருந்தனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் சுல்லங்குடி, திருமானூர் மாலத்தாங்குளம், விழுப்பனங்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த தேவாலயத்திற்கு வருகை புரிந்து ஏசு பிறப்பை கோலாகலமாக கொண்டாடினர். நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் ஆலயத்தின் பங்குதந்தை சுவக்கீன் மற்றும் உதவி பங்குத்தந்தை ஆல்வின் ஆகியோர் ஒன்றிணைந்து சிறப்பு திருப்பலி நடத்தி ஏசு பிறப்பை கொண்டாடி, அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசி வழங்கினர். இதேபோல் புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள மங்கல மாதா தேவாலயத்திலும், குலமாணிக்கம் கிராமத்திலுள்ள புனித இஞ்ஞாசியார் தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பிரார்த்தனை

மேலும் வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பின் நிகழ்வுகளை குறிக்கும் வகையில், மாட்டு தொழுவம்போல் செட் அமைத்து அதில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனுள் ஆடு, பசு போன்ற கால்நடைகள் வசிப்பது போன்றும் சிறப்பாக அமைத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஆலயம் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 ம ணியளவில் மாட்டு தொழுவத்தில் குழந்தை ஏசு பிறந்ததை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர். அங்கு கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றி அனைவருக்கும் வாழ்த்து கூறினார். இறைமக்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

இதேபோல் ஆண்டிமடம் புனித மார்ட்டினார் தேவாலயம், தென்னூர் புனித அன்னை லூர்து, கூவத்தூர் புனித அந்தோணியார், பட்டிணங்குறிச்சி புனித லூர்து அன்னை, அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள், கீழநெடுவாய் புனித அன்னாள் ஆகிய தேவாலயங்களிலும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டாடினர்.


Next Story