வாக்கு எண்ணும் முறையை அரசியல் கட்சியினருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் - தி.மு.க.வினர் கோரிக்கை


வாக்கு எண்ணும் முறையை அரசியல் கட்சியினருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் - தி.மு.க.வினர் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2019 10:45 PM GMT (Updated: 26 Dec 2019 3:28 PM GMT)

வாக்கு எண்ணும் முறையை முன்கூட்டியே அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம், தி.மு.க.வினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்ட தி.மு.க. தேர்தல் பொறுப்பாளரும், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேசிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு அதிக அளவு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது அரசியல் கட்சியினர் உடன் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் காவலுக்காக அரசியல் கட்சியினரை அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் அரசியல் கட்சி முகவர்களை அனுமதித்து சி.சி.டி.வி. கேமராக்களை பார்க்க அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணும் முறையை முன்கூட்டியே அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மேஜைகளில் குறைந்தபட்சம் 3 பேரையாவது அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்த பின், சட்டமன்ற, நாடாளுமன்ற நடைமுறை போல் வேட்பாளர்கள் வாங்கிய வாக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு உரிய சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் எழிலரசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும். ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் தங்களின் அதிகார பலம், பண பலத்தை வைத்து தங்களுக்கு சாதகமாக இல்லாத சில இடங்களில் வாக்குப்பதிவின் போது பதற்றத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. எனவே, அதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும்” என்றார்.

Next Story