விவசாயியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது


விவசாயியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2019 4:45 AM IST (Updated: 26 Dec 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு சுவரின் அருகே செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க விவசாயியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). விவசாயியான இவர் தனது வீட்டு சுவரின் அருகே செல்லும் மின்சார கம்பியை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க பெரம்பலூர் நான்கு ரோடு அருகே இயங்கி வரும் மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதனை மாற்றி தராமல், மின்சார வாரிய பெரம்பலூர் உதவி செயற்பொறியாளரான பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த மாணிக்கம்(42), சரவணனை பலமுறை அலைகழித்துள்ளார். மேலும் மாணிக்கம் மின்சார கம்பியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றால் ரூ.1000 லஞ்சமாக தர வேண்டும் என்று சரவணனிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இது குறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவி, ரூ.ஆயிரத்தை மாணிக்கத்திடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி சரவணன் நேற்று மாலை பெரம்பலூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.

உதவி செயற்பொறியாளர் கைது

அங்கு அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சரவணன், ரசாயன பவுடர் தடவிய பணத்தை மின்சார வாரிய பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் மாணிக்கத்திடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று மாணிக்கத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக பெற்ற 1000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் மாணிக்கத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டதாக தெரிகிறது. விவசாயி வீட்டின் சுவர் அருகே செல்லும் மின்சார கம்பியை மாற்றியமைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைதான சம்பவம் மின்சார வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story