கிறிஸ்துமஸ் விழா கொண்டாட அக்காள் வீட்டுக்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி


கிறிஸ்துமஸ் விழா கொண்டாட அக்காள் வீட்டுக்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 27 Dec 2019 4:00 AM IST (Updated: 27 Dec 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட அக்காள் வீட்டுக்கு சென்ற வாலிபர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

மொடக்குறிச்சி, 

மொடக்குறிச்சி அருகே உள்ள திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. அவருடைய மகன் ராஜ்குமார் (வயது 32). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராஜ்குமாரின் அக்காள் திருமணம் ஆகி எழுமாத்தூர் அருகே 60 வேலம்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

குரங்கன்பள்ளம் என்ற இடத்தின் அருகே சென்றபோது ஈரோட்டில் இருந்து முத்தூர் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.அந்த லாரியை அவர் முந்தி செல்ல மோட்டார்சைக்கிளை ரோட்டோரம் இடதுபுறமாக ஒதுக்கினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த ராஜ்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story