சின்னம் மாறிய விவகாரம்: ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய 21-வது வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து


சின்னம் மாறிய விவகாரம்: ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய 21-வது வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து
x
தினத்தந்தி 29 Dec 2019 3:45 AM IST (Updated: 29 Dec 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

சின்னம் மாறிய விவகாரம் தொடர்பாக ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய 21-வது வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என கலெக்டர் பிரபாகர் அறிவித்துள்ளார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 21-க்கான உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் தொடங்கியது. அப்போது வாக்குச்சீட்டில் கைப்பை சின்னத்திற்கு பதிலாக மகளிர் பணப்பை (லேடீஸ் பர்ஸ்) சின்னம் அச்சிடப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து வாக்குச்சாவடி எண் 185, 186, 187, 188, 189, 190, 192, 194 மற்றும் 195-ல் ஆகியவற்றில் ஊராட்சி ஒன்றிய 21-வது வார்டு உறுப்பினருக்கான நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுவாக்குப்பதிவு

தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதிகள் 1995 விதி 57-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது படியும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 21-க்கான உறுப்பினர் பதவியிடத்திற்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊத்தங்கரை அருகே மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் அந்த பகுதி வாக்காளர்களுக்கு அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்தந்த கிராம நிர்வாக உதவியாளர்கள் தண்டோரா மூலம் மறுவாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்..


Next Story