விக்கிரமங்கலம் அருகே உள்ள வேதநாராயணசாமி பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்


விக்கிரமங்கலம் அருகே உள்ள வேதநாராயணசாமி பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2019 4:00 AM IST (Updated: 29 Dec 2019 8:47 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே உள்ள வேதநாராயணசாமி பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விக்கிரமங்கலம்,

தமிழ்நாடு தெய்வீகத் திருக்கோவில்கள் நிறைந்த புனித மாநிலமாகும். அரியலூரில் கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் இன்றும், உலகளவில் பறைசாற்றி கொண்டு வருகிறது. இதேபோல் தேவார பாடல் பெற்ற ஸ்தலமான திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி, கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில், கோவிந்தப்புத்தூர் கங்காஜடேஸ்வரர், உடையவர் தீயனூர் ஐமத்கனீஸ்வரர், காமரசவல்லி கார்கோடேஸ்வரர் போன்ற சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. ஆனால் இன்று பல கோவில்கள் முறைப்படி பராமரிக்காத காரணத்தால் பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற வேதநாராயணசாமி பெருமாள் கோவில் பழுதடைந்து கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது கோவில் மேல் புறத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. மேலும் மழைக்காலத்தில் கோவில் முற்றிலும் மழைநீர் ஒழுகும் நிலை காணப்படுகிறது. தற்போது கோவில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பக்தர்கள் வழிபட முடியாத நிலை உள்ளது.

புனரமைக்க வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த கோவில் பழுதடைவதற்கு முன்பு ஒரு கால பூஜை நடைபெற்றது. தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பூஜைகள் நடைபெறுவது கிடையாது. மேலும் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருடுபோனது. தற்போது அந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்துள்ளனர். வரலாற்று சின்னமான இந்த பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்து காணப்படும் இந்த கோவிலை புனரமைத்தோ அல்லது இடித்து விட்டு புதிததாகவோ கட்டித்தர வேண்டும் என்றனர்.


Next Story